மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் கமிஷனரிடம் மனு
வியாழக்கிழமை, நவம்பர் 20, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
சென்னை: மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தால் தாங்கள் பாதிப்புக்குள்ளானது குறித்து புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் தினம், குழந்தைகள் தினத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல, ஆண்கள் தினத்தை ஆண்கள் நலனை காக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னையில், இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு முழுக்க, முழுக்க ஆண்களின் நலனுக்காக செயல்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா முழுவதும் 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குறிப்பாக, மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் அனுமதி வழங்காததால், இந்த பேரணி ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து கோபமடைந்த கணவன்மார்கள் மற்றும் ஏராளமான ஆண்கள், கமிஷனர் அலுவலகத்திற்கு விரைந்தனர். ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
பின்னர் வெளியே வந்த அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். சுரேஷ்ராம் என்பவர் கூறுகையில், சமுதாயமும், அரசியல் சட்டமும் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. ஆண்கள் தவறு செய்தால் சட்டம் தண்டிக்கிறது. ஆனால் தவறு செய்யும் பெண்களை சட்டம் தண்டிப்பதில்லை.
ஆண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் போலீசில் பிடித்து கொடுக்கிறார்கள். பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் இரக்கப்படுகிறார்கள். மணமேடையில் ஆண் தாலி கட்ட மறுத்தால் வரதட்சணை கொடுமை சட்டத்தில் கைது செய்கிறார்கள். மணமேடையில் பெண் வேறு ஒருவனோடு ஓடி போனால் விருப்பப்படி அவள் வாழலாம் என்று சொல்கிறார்கள்.
திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால், மனைவியின் சாவுக்கு கணவன் காரணம் இல்லை என்பதை ஆர்.டி.ஓ. விசாரணையில் நிரூபிக்க வேண்டியதுள்ளது. அதே நேரத்தில் ஆண் இறந்தாலோ, பெண்களுக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை.
இந்தியாவில் தற்போதைய கணக்குப்படி ஆண்டுக்கு 55 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களால் பாதிக்கப்பட்டுதான் உயிரை இழக்கிறார்கள். பெண்கள் ஆண்டுக்கு 28 ஆயிரம் பேர் தான் தற்கொலை செய்கிறார்கள்.
பெண்கள் ஆதிக்கம் அதிகம்
எனவே, புள்ளி விவர கணக்கை பார்த்தால், தற்போது பெண் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. அதை தவறாக பயன்படுத்தி கணவன்மார்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
கணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் தாய், தந்தையும், சகோதரிகளும் கூட கைதாகிறார்கள். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் தவறு செய்யும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டமும் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுகிறது. கணவர்கள் முறைத்து பார்த்தால்கூட உடனே புகார் கொடுத்து விடுகிறார்கள். இந்த சட்டங்களால் அமைச்சராக இருந்த ஒருவரும் பாதிக்கப்பட்டார். எம்.பி. ஒருவரும், நீதிபதி ஒருவரும்கூட பாதிக்கப்பட்டதை செய்திகளாக பார்த்துள்ளோம்.
எனவே வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தையும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தோம்.
பெண்களுக்கு சமமாக ஆண்களுக்கும் உரிமை தேவை
நாங்கள் பெண்களை மதிக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமை, ஆண்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. பெண்களை காப்பாற்றும் சட்டம், ஆண்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தான் எங்கள் சங்கம் கேட்கிறது என்றார்.
இன்னொருவர் கூறுகையில், கூலிப்படையை அனுப்பி தன்னுடைய மனைவியே தன்னை அடித்து உதைத்தாள் என்று வேதனையோடு கூறினார்.
இன்னொருவரோ, தனது மனைவியின் கொடுமையால் தனது தாயார் பரிதாபமாக இறந்து போனதாக கோபத்துடன் கூறினார்.
Thursday, November 20, 2008
Subscribe to:
Posts (Atom)